Saturday, April 19, 2008

பேரன் புண்யாஹ வசனம் SRIRAM PUNYAHA VACHANAM

எங்கள பேரனின் புண்யாஹ வசனம் ஏப்ரல் 17 (2008) வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடந்தேறியது.

குழந்தைக்கு ஸ்ரீராம் (SRIRAM) என்று பெயர் வைத்துள்ளோம். அழகான பெயர்.

காலை 8 மணிக்கே நானும் விஜயாவும் அடையாறு சென்று விட்டோம். காப்பரிசி பண்ணி எடுத்துக் கொண்டு போனோம். அங்கு யாவரும் - ஸௌம்யா உள்பட - குளித்து தயாராக இருந்தனர். ஜெயராமன், கல்யாணி


முதலில் வந்தனர். பூர்ணிமாவை வீட்டிலேயே விஜய் துணையுடன் விட்டுவிட்டு வந்தனர் - இதுவே முதல் தடவை. பின்னர் சரோஜாவும் அத்திம்பேரும் வந்தனர். 9-15 க்கு வாத்தியார் வந்தார், புண்யாஹவசனத்தை ஆரம்பித்தார்.

9-30க்கு அதிதி, கிருத்திகா, மாமா, மாமி வந்தனர். (மங்களம், பத்மா வரவில்லை. சுகவனம், சுதா பூனா சென்றுவிட்டனர். அர்விந்த் பாங்காக் சென்றுள்ளான். அஷோக், நீரஜாவும் வரவில்லை). காயத்ரி அம்மா வழியில் அக்கா, அத்திம்பேரை தவிர வேறு யாரும் வரவில்லை. எல்லாரும் ராம நவமிக்காக் துறையூர் சென்று விட்டனர். அப்பா வழியில் வந்திருந்தனர். மொத்தம் 35 - 40 பேர் இருந்திருப்போம். கூட்டம் குறைவுதான் - ஸௌம்யாவின் புணயாஹவசனத்தின் போது (27 May 2006) 100 -120 பேர் என ஜேஜே என்றிருந்தது.


அதிதியும், சௌம்யாவும் புதுப் புது டிரெஸ் போட்டுக்கொண்டனர். தம்பிப் பாப்பாவை சுற்றி சுற்றி வந்தனர் - ஆனால், அவன் தூங்கிக் கொண்டே இருந்தான்.

குழந்தையும் அப்பாவும் (ARUN) ஒரே நட்சத்திரத்தில் (அஸ்வினி) பிறந்திருப்பதால் "ஏக நட்சத்திர ஹோமம்" செய்தார்கள். குழந்தைக்கு நாங்கள் ஒரு தங்க செயின் (8.4 கிராம் @ 1115.00) வாங்கினோம்.

அர்விந்த், அஷோக்கும் செலவில் பங்கு கொண்டனர். வெள்ளிக்காப்பு, தங்கக்காப்பு பழசுதான், ஸௌம்யாவிற்கு வாங்கியது. முக்காப்பு மட்டும் புதுசாக வாங்கினோம். டிரெஸ் நிறைய வாங்கினோம் - ஸௌம்யா, அதிதிக்கும் சேர்த்துத்தான்.



பின்னர் சாப்பாடு - Catering சொல்லியிருந்தார்கள். 35 - 40 பேர் சாப்பிட்டோம். ஜெயராமன் - கல்யாணி புறப்பட்டனர். 2-30க்கு தொட்டில் போட்டனர்.


விஜயாவும், கிருத்திகாவும் குழந்தைக்கு தங்கக்காப்பு, வெள்ளிக்காப்பு, முக்காப்பு, (கறுப்பு) வளையல் போட்டனர். பாட்டுக்கள் பாடி, பின்னர் ஹாரத்தி எடுத்தனர். இவ்வாறாக புண்யாஹ வசனம் சிறப்பாக நடந்தேறியது.

சரோஜா - அத்திம்பேர், கிருத்திகா, அதிதி, மாமா, மாமி வீடு திரும்பினர். 4 மணி சுமாருக்கு நாங்களும் வீடு திரும்பினோம், அருண் காரில். எல்லாருக்கும் போன் செய்து விஷயம் தெரிவித்தோம்.












இன்னும் போட்டோக்கள் இங்கே.

ராஜப்பா
19-04-2008 12:30 மணி

Monday, April 07, 2008

பேரன் பிறந்தான், எனக்கு பேரன் பிறந்தான் ..

Gayathri, Arun, Sowmya, Aditi, Grandson -- Keywords
பேரன் பிறந்தான். 7 ஏப்ரல் 2008 காலை 5-34க்கு.

அருண் - காயத்ரிக்கு செல்வ மகனும் எனக்கும், விஜயாவிற்கும் செல்லப் பேரனும் இன்று விடியற்காலை 5-34 க்குப் பிறந்தான்.

காயத்ரிக்கு நேற்று விடியற்காலமே பிரஸவ வலி எடுக்க ஆரம்பித்தது. அவளை காலை 6 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை ஹைரோட்டில் உள்ள "சீதாபதி ஹாஸ்பிடலில்" அட்மிட் செய்து விட்டு, அருண் எங்களுக்கு தகவல் தெரிவித்தான்.

நேற்று காலை சுமார் 4 மணிக்கு எனக்கு ஒரு கனவு வந்தது - கனவில் அருண் போனில் என்னிடம் சொல்கிறான் : "அப்பா, காயத்ரியை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து விட்டேன்!". இந்த என்னுடைய விடியல் கனவை, 6-30 மணிக்கு நான் விஜயாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே - நம்பினால் நம்புங்கள் - அதே விநாடி போன் அடிக்கிறது. போனில் நிஜமாகவே அருண், நிஜமாகவே காயத்ரி அட்மிட் ஆகியிருக்கிறாள் - இதை என்னவென்று சொல்வீர்கள். சாவித்திரியிடம் இதைக் குறிப்பிட்டபோது, "இதுதான் ரத்தம்" எனப் பரவசப்பட்டாள்.

ஹாஸ்பிடலுக்கு சென்றோம். ஆனால் காயத்ரிக்கு வலி வரவேயில்லை. இரவு 8 மணிவரை இருந்துவிட்டு வீடு திரும்பினோம்.காயத்ரியின் அம்மா துணைக்கு ஹாஸ்பிடலில் இருந்தார். ஸௌம்யாவிற்கு தன் அம்மா ஹாஸ்பிடலில் இருப்பதே தெரியாது. அடையாறில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த அவள் எழுந்ததும், அவளை இங்கே எங்கள் வீட்டிற்கு கூட்டி வந்து, காலை 10 மணிக்குத்தான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிச் சென்றோம். அம்மாவைப் பார்த்ததும் ஸௌம்யா கேட்ட முதல் கேள்வி - "அம்மா, உனக்கு என்ன ஆச்சு?" - ஆச்சரியத்தில் திளைத்து விட்டேன். ரொம்பவும் சமத்தாக இருக்கிறாள். God Bless her.

இன்று, 7 ஏப்ரல் 2008.
காலை 4 மணிக்கு போன் அடிக்கிறது; காயத்ரியின் அம்மா. காயத்ரிக்கு சிசேரியன் பண்ண ரெடி செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்று தகவல் கொடுக்கிறார். அரக்கப் பரக்க கிளம்பினோம் - அருண், நான், விஜயா, ம்ற்றும் அஷோக். 4-35க்கு ஹாஸ்பிடலில் இருந்தோம். ஆபரேஷன் தியேட்டர் வாசலில் 5 மணி முதல் காத்திருந்தோம் - ஒவ்வொருவர் மனசிலும் ஆயிரம் எண்ணவோட்டம். விஜயா மற்றும் மாமியின் இடைவிடாத ஸ்லோகங்கள்.

5-40க்கு டாக்டர் வெளியில் வந்தார், இனிப்பு செய்தியை சொன்னார் - ஆண் குழந்தை 5-34க்குப் பிறந்தது, எடை 2.9 கிலோ. ஆண்டவனே, உனக்குப் பல கோடி பல்லாயிரம் கோடி நமஸ்காரங்கள். விழியோரத்தில் முகிழ்த்த அந்த கண்ணீர் முத்தை, யாருமே துடைத்துக் கொள்ளவில்லை.

6 மணிக்கு முன்பாகவே குழந்தையை அறைக்குக் கொண்டு வந்து விட்டனர். அந்த பட்டு மேனி இனியனை, பஞ்சுப் பொதியலை, அழகுப் பெட்டகத்தை, செல்வக் களஞ்சியத்தை மாறி மாறி தூக்கிக்கொண்டு மடியில் இருத்திக் கொண்டோம். குழந்தையும் கண் விழித்தபடியே எல்லாரையும் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

7-30 மணி சுமாருக்கு காயத்ரியையும் அறைக்கு கொண்டு வந்தனர். அயர்ச்சியையும் மீறி அவள் முகத்தில் ஒரு மகிழ்ச்சி, ஆனந்தம். 8-30 மணிக்கு "புத்தம்புது அக்காக்கள்" ரெண்டு பேரும் வந்தனர் - "தம்பிப் பாப்பா எங்கே, தம்பிப் பாப்பா எங்கே?"

தம்பிப் பாப்பாவை பார்த்து ரெண்டு பேருக்கும் ஒரே மகிழ்ச்சி. இப்போதும் ஸௌம்யா தன் அம்மாவை பார்த்து, "எப்பிடி இருக்கே, சௌக்கியமா" என்றுதான் கேட்டாளே தவிர ஒரு சிணுங்கலோ, அழுகையோ கிடையாது. 10 மணிக்கு வீட்டிற்குக் கிளம்பும்போதுதான் ரெண்டு அக்காக்களும் ஒரே "அழுகை" - தம்பிப் பாப்பாவை இப்போதே ஆத்துக்கு கூட்டிண்டு போயிடலாம்!

எல்லாருக்கும் போன் மூலம் செய்தி சொன்னோம்.

காயத்ரியும் குழந்தையும் நலமாக இருக்கின்றனர். குழந்தை அஸ்வினி நட்சத்திரம்.

வாழ்த்துக்கள், ஆசிகள் சொன்ன எல்லாருக்கும் காயத்ரி - அருண் - அஷோக் - நீரஜா - அர்விந்த் - கிருத்திகா - விஜயா சார்பிலும் நான் நன்றி கூறிக்கொள்கிறேன்.

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றாமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம், ஆண்டவனே உனக்கு நமஸ்காரங்கள்.

ராஜப்பா
7-30PM 07-04-2008