Thursday, August 05, 2010

அதிதியின் கீதை ஸ்லோகங்கள்

போன வாரத்தில் ஒரு நாள் - ஸ்கூலிலிருந்து (ஹரிஸ்ரீ வித்யாலயா)   திரும்பிய அதிதி, “தாத்தா, ஒனக்கு ஒண்ணு சொல்றேன் கேளு” என்று ஆரம்பித்து, குற்றால அருவி சாரலாக, பொங்கிப் பெருகி வரும் காவிரியாக, மடமடவென்று எதையோ சொல்லி முடித்தாள்.

அவள் முகத்தில் வழக்கம்போல பெருமிதமும், குறும்பும் கொப்பளித்தன.  எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. “காத்தால நீ படிப்பியே, அந்த கீதை, தாத்தா” என்று விளக்கம் கொடுத்தாள். கீதை புஸ்தகத்தை எடுத்து INDEX ஐ புரட்டினாலும் அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியவில்லை.

 “ஸூர்ய ஏவ மஹாபாஹோ ..” என்பது ஆரம்பம் எனப் புரிந்தாலும், “ஸூர்ய” என்று ஆரம்பிக்கும் ஸ்லோகம் கீதையில் இல்லை.  எத்தனை முறை கேட்டாலும் அதிதி ஸூர்ய ஏவ என்றே ஆரம்பித்தாள்.

மறுநாள்தான் குழப்பம் நீங்கியது - அர்விந்த் ஸ்கூலிலிருந்து வந்ததும் “கீதையின் 10வது அத்தியாயம், முதல் 10 ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்” என சொன்னான்.

                भुय एव महाबाहो श्रूणु मे परमम वच: ।

           यत्त ते अहम प्री-यमाणाय वच्-स्यामि हित-काम्यया ॥

இது அத்தியாயம் 10 -- ஸ்லோகம் 1.

பூய ஏவ என்பதை ஸூர்ய ஏவ என மழலையில் மாற்றிவிட்டாள். இதுவரை முதல் 3 ஸ்லோகங்கள் சொல்லி கொடுத்திருக்கிறார்கள். அதிதி தினமும் காலையில் என் பக்கத்தில் உட்கார்ந்து, “ஸூர்ய ஏவ” ஆரம்பித்து 3 ஸ்லோகங்களையும் மழலையில் சொல்லுவாள்.

கீதை அருளிய கிருஷ்ண பகவானே அந்த மழலையில் மனசை பறிகொடுத்து விடுவான் - பூய ஏவ == ஸூர்ய ஏவ என மாற்றப்பட்டால் என்ன !?

ராஜப்பா
05-08-2010
காலை 11.00 மணி


Wednesday, August 04, 2010

அதிதியும் சிண்ட்ரெல்லாவும்

இன்று (4 ஆகஸ்ட்) காலை அதிதிக்கு நான் சிண்ட்ரெல்லா கதை சொல்லிக் கொண்டிருந்தேன்.

“அழுக்காய், கிழிந்த உடைகளுடன் அழுது கொண்டிருந்த சிண்ட்ரெல்லா முன்பு ஒரு தேவதை தோன்றினாள்; ’அழாதே, நான் உன்னை ஒரு அழகிய குட்டி தேவதையாக மாற்றுகிறேன்’ எனச் சொல்லி, குழந்தை சிண்ட்ரெல்லாவிற்கு வாசனை திரவியங்கள் போட்டு குளிப்பாட்டி, புத்தம் புது உடைகள் அணிவித்து, அலங்காரம் பண்ணி, காலுக்கு பளபளக்கும் கண்ணாடி ஷு போட்டவுடன், சிண்ட்ரெல்லா அழகிய ஒரு குட்டி தேவதையாக காட்சி அளித்தாள்,” எனச் சொன்னேன்.

அப்போது, அதிதி குளித்திருக்கவில்லை. அவள் உடனே தன் பாட்டியை (விஜயா) கூப்பிட்டு, “பாட்டி, எனக்குக் குளிப்பாட்டி, என்னையும் ‘குட்டி தேவதையாக ஆக்கு“ எனச் சொல்லி, குளித்தாள்; புது ட்ரெஸ் போட்டுக்கொண்டாள். அலங்காரம் பண்ணிக்கொண்டாள். லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டாள். செண்ட் பூசிக் கொண்டாள். முதல் நாள் வாங்கியிருந்த புது ஷூவை போட்டுக் கொண்டாள். விஜயாவும் தான் அணிந்திருந்த இரண்டு செயின்களைக் கழட்டி, பேத்திக்கு போட்டு விட்டாள்.

15 நிமிஷத்தில் என்னிடம் வந்து, “தாத்தா .... என்னைப் பாரு; நானும் தேவதை போல இருக்கேன் இல்ல” என மலர்ந்த முகம் முழுதும் புன்னகையுடன் தோன்றினாள் - முகத்தில்தான் என்ன பெருமை!







குழந்தையைக் உச்சி மோர்ந்து முத்தமிட்டேன் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

ராஜப்பா
04-08-2010
காலை 11 மணி