முன்பே எழுதியிருக்கிறேன் (படிக்கவும்) - அதிதியும் ஸௌம்யாவும் நெறய்ய பேசுகிறார்கள் என்று. அதிதியின் மழலை மணிக்கு மணி கூடிக்கொண்டே போகிறது.
தானாகவே கற்பனை பண்ணிக் கொண்டு தனக்குத் தானே விளையாடிக் கொள்வதில் அதிதி திறமைசாலி.
நேற்று இரவு (30-5-2008) அவள் "தாத்தா, ஒனக்கு மம்மம் வேணுமா? " என்று என்னைக் கேட்டாள். "ஆமாம் " என்றேன். என்ன செய்கிறாள் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். தானாகவே டிரெஸ் போட்டுக்கொண்டாள் (பாவனைதான்); பின்னர், உம்மாச்சியை கைகூப்பி வேண்டினாள். (கோயிலில் இருக்கிறாளாம்!); உம்மாச்சி விபூதி இட்டுக் கொண்டாள் (வாயில் போட்டுக் கொள்ள மறக்கவில்லை); கஜானனம் பூத கணாதி ... ஸ்லோகம் சொன்னாள்; விழுந்து நமஸ்காரம் பண்ணினாள்.
கோயில், மம்மம் - இரண்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கக் கூடும்? இருங்கள், இதோ அதிதி எங்கே போகிறாள்? கட்டில் படுக்கை மீது 4 அடி எடுத்து வைத்த அவள், தன் சட்டை பாக்கெட்டிலிருந்து "அம்பது ரூபாய் காசு " எடுத்தாள் (பாவனைதான்). கையை நீட்டி, "மம்மம் தாங்கோ " என்றாள்.
கையில் வாங்கிக் கொண்டு, அதை என்னிடம் "தாத்தா, மம்மம் இதோ" என்று கொடுத்தாள். என்ன, புரிகிறதா? நேற்று சாயங்காலம் அவள் தன் அம்மாவுடன் மயிலாப்பூர் ஸ்ரீகற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலுக்கு போயிருக்கிறாள்.
ஸ்வாமி தரிசனத்திற்குப் பிறகு பிரசாதம் விற்பனை இடத்திற்கு போய், பணம் கொடுத்து புளியோதரை வாங்கி வந்தார்கள். (கொசுறுச் செய்தி: இந்தக் கோயில் புளியோதரை மிக ருசியாக இருக்கும்) எல்லாவற்றையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அதிதி இதையே எனக்குப் பண்ணிக் காட்டி "மம்மம்" கொடுத்தாள்.
நிஜ புளியோதரையை விட, குழந்தையின் இந்த மம்மம் புளியோதரை பல மடங்கு ருசியாக இருந்ததில் வியப்பு ஒன்றுமில்லை.
God Bless Aditi. God Bless Sowmya, SRIRAM
ராஜப்பா
12.45 31-5-2008
Saturday, May 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment