Saturday, May 31, 2008

அதிதி தந்த புளியோதரை Aditi

முன்பே எழுதியிருக்கிறேன் (படிக்கவும்) - அதிதியும் ஸௌம்யாவும் நெறய்ய பேசுகிறார்கள் என்று. அதிதியின் மழலை மணிக்கு மணி கூடிக்கொண்டே போகிறது.

தானாகவே கற்பனை பண்ணிக் கொண்டு தனக்குத் தானே விளையாடிக் கொள்வதில் அதிதி திறமைசாலி.

நேற்று இரவு (30-5-2008) அவள் "தாத்தா, ஒனக்கு மம்மம் வேணுமா? " என்று என்னைக் கேட்டாள். "ஆமாம் " என்றேன். என்ன செய்கிறாள் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். தானாகவே டிரெஸ் போட்டுக்கொண்டாள் (பாவனைதான்); பின்னர், உம்மாச்சியை கைகூப்பி வேண்டினாள். (கோயிலில் இருக்கிறாளாம்!); உம்மாச்சி விபூதி இட்டுக் கொண்டாள் (வாயில் போட்டுக் கொள்ள மறக்கவில்லை); கஜானனம் பூத கணாதி ... ஸ்லோகம் சொன்னாள்; விழுந்து நமஸ்காரம் பண்ணினாள்.

கோயில், மம்மம் - இரண்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கக் கூடும்? இருங்கள், இதோ அதிதி எங்கே போகிறாள்? கட்டில் படுக்கை மீது 4 அடி எடுத்து வைத்த அவள், தன் சட்டை பாக்கெட்டிலிருந்து "அம்பது ரூபாய் காசு " எடுத்தாள் (பாவனைதான்). கையை நீட்டி, "மம்மம் தாங்கோ " என்றாள்.

கையில் வாங்கிக் கொண்டு, அதை என்னிடம் "தாத்தா, மம்மம் இதோ" என்று கொடுத்தாள். என்ன, புரிகிறதா? நேற்று சாயங்காலம் அவள் தன் அம்மாவுடன் மயிலாப்பூர் ஸ்ரீகற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலுக்கு போயிருக்கிறாள்.

ஸ்வாமி தரிசனத்திற்குப் பிறகு பிரசாதம் விற்பனை இடத்திற்கு போய், பணம் கொடுத்து புளியோதரை வாங்கி வந்தார்கள். (கொசுறுச் செய்தி: இந்தக் கோயில் புளியோதரை மிக ருசியாக இருக்கும்) எல்லாவற்றையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அதிதி இதையே எனக்குப் பண்ணிக் காட்டி "மம்மம்" கொடுத்தாள்.

நிஜ புளியோதரையை விட, குழந்தையின் இந்த மம்மம் புளியோதரை பல மடங்கு ருசியாக இருந்ததில் வியப்பு ஒன்றுமில்லை.

God Bless Aditi. God Bless Sowmya, SRIRAM

ராஜப்பா
12.45 31-5-2008

Wednesday, May 28, 2008

அதிதியும் ஸௌம்யாவும் - Aditi and Sowmya

அதிதியும் ஸௌம்யாவும்.

என்னுடைய பெரிய பேத்தி ஸௌம்யாவின் இரண்டாம் பிறந்த நாள் - தமிழ் நட்சத்திர (பூராடம்) பிரகாரம் நாலு நாட்களுக்கு முன்னால் மே 24-ஆம் தேதி வந்தது. (குழந்தையின் ஆங்கில முறை பிறந்த நாள் மே 17-ஆம் தேதி - இங்கே படிக்கவும்).

அன்று மாலை கோயிலுக்குச் சென்று வந்த குழந்தை எங்கள் வீட்டிற்கு வந்தாள். "இப்ப என்ன பண்ணனும், ஸௌம்யா?" என அவள் அப்பா கேட்டதும், குழந்தை ஓடி வந்து, "தாத்தா, பாட்டி"-ன்னு எங்களை கூப்பிட்டு, இருவருக்கும் விழுந்து நமஸ்காரம் பண்ணினாள் !! வியப்பிலும், மகிழ்ச்சியிலும் என் மனம் துள்ளியது. தூக்கி, உச்சிமோர்ந்து முத்தமிட்டேன். விழிக்கடையில் ஒரு முத்து முகிழ்த்தது.

கடவுள் அவளை ஆசிர்வதிக்கட்டும். God Bless Sowmya.

இளைய பேத்தி அதிதியும் நெறய்ய பேசுகிறாள். "என்ன என்ன என்ன" என்று கேள்வி மயம்தான். நேத்திக்கு (27-05-2008) அவள் இரண்டு புதிய வார்த்தைகளை கற்றுக் கொண்டிருக்கிறாள் - "ஓஹோ", "அப்படியா".

"என்ன", "என்ன" இப்படி பல என்ன-க்களுக்குப் பிறகு, "ஓஹோ" என்று அவள் முடித்த விதம் இருக்கிறதே, சொல்லி மாளாது. (படிக்கும் நீங்களும் "ஓஹோ" என்கிறீர்களா?"

God Bless Aditi

Rajappa
11.00am 28 May 2008

Sunday, May 18, 2008

ஸௌம்யாவின் இரண்டாம் பிறந்த நாள். Sowmya Birthday

ஸௌம்யா பிறந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன - இப்போதுதான் பிறந்தாள் போலத் தோன்றுகிறது, அதற்குள்ளாகவே இரண்டு ஆண்டுகளா!?
Sowmya, Birthday அவளது முதல் பிறந்த நாள் கொண்டாட்டம் இங்கே படிக்கவும்.

குழந்தையின் இரண்டாம் பிறந்த நாளை நேற்று (17 மே 2008) அடையாறில் (காயத்ரியின் அப்பா-அம்மா வீட்டில்) மிக விமரிசையாக் கொண்டாடினோம்.

நான், விஜயா, கிருத்திகா, அதிதி, சாவித்திரி, ரமேஷ், கார்த்திக் ஆகியோர் எங்கள் வீட்டிலிருந்து மாலை 5-45க்குக் கிளம்பிப் போனோம். அர்விந்த் அமெரிக்கா சென்றுள்ளான்; அஷோக், நீரஜா வரவில்லை. GBS பக்கத்திலிருந்து சுமார் 20 பேர் இருந்தனர்.

மாலை 6-30க்கு ஸௌம்யா கேக் வெட்டினாள். பெரிய கேக், அருண் தனது ஹோட்டலிலிருந்து ஆர்டர் செய்திருந்தான். அதிதிக்கும் கேக் வெட்ட ஒரே ஆசை! (அடுத்த மாசம் அவளது பிறந்த நாள் வருகிறது.) காயத்ரியின் அம்மா சாம்பார் சாதம், தயிர் சாதம், கோஸ் கறி, பருப்பு வடை செய்திருந்தாள். ஹோட்டலிலிருந்து அருண் காரட் ஹல்வா வாங்கி வந்திருந்தான்; விஜயா அஷோகா ஹல்வா செய்தாள்.

ஸௌம்யாவிற்கு எங்கள் பரிசாக ஒரு காது-வ்ளையம் வாங்கினோம்; 2.25 கிராம் தங்கம்; விலை 3000.00 ஆயிற்று. (அதிதியோடது 2900.00 ஆயிற்று).

இரவு 9-45க்கு நாங்கள் வீடு திரும்பினோம்; இவ்வாறாக, ஸௌம்யாவின் 2-ஆம் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடினோம். குழந்தையின் தமிழ் நட்சத்திர (பூராடம்) பிறந்த நாள் மே 24-ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது.

(போட்டோக்கள் விரைவில்.)

ராஜப்பா
11:15 18-05-2008

Friday, May 09, 2008

என்ன ஒரு அழகான பேச்சு !

What a sweet talk By Aditi and Sowmya !


ஸௌம்யாவும் அதிதியும் மழலையில் கொஞ்சுவதைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன் (இங்கே படிக்கவும்).

தற்போது இரண்டு குழந்தைகளுமே மிகவும் சரளமாக, கோர்வையாக, முழு முழு வாக்கியங்களாக் பேசி எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறார்கள். அதுவும் 4, 5 வாக்கியங்களைத் தொடர்ந்து பேசுகிறார்கள்.

நாம் எது சொன்னாலும் உடனே பிடித்துக் கொண்டு விடுகிறார்கள். அனுமார் வால் போல இடைவிடாத கேள்விகள் - "இது என்ன? நீ என்ன பண்ணறே? என்ன மாத்தரே (மாத்திரை tablet) சாப்பிடறே? ஆர் குடுத்தா? எந்த டாக்டர் மாமா குடுத்தா?" இதுபோன்று கேள்விகளுக்கு முடிவே கிடையாது.

காலை எழுந்து குளித்ததும், ஸ்வாமிக்கு முன் நின்று, "கஜாநநம் பூத கணாதி சேவிதம் ---" மற்றும் "மூஷிக வாகன மோதக ஹஸ்த --" மறக்காமல் முழுதும் சொல்லிவிடுவார்கள். "அகர முதல எழுத்தெல்லாம் -- " இதுபோன்ற சில குறள்கள் கூடத் தெரியும். "சஷ்டியை நோக்க சரவண பவனாம் -- " கற்றுக்கொண்டு வருகிறார்கள்.


அதிதிக்கும், ஸௌம்யாவிற்கும் இன்னும் இரண்டு வயசு கூட ஆகவில்லை. ஆண்டவன் குழந்தைகளை ஆசிர்வதிக்கட்டும்.

ராஜப்பா
7-45PM, 09-05-2008

Saturday, May 03, 2008

அதிதி சலூனுக்குப் போகிறாள்

Aditi's First Hair Cut

அதிதியின் தலைமுடி எக்கச்சக்கமாக வளர்ந்துள்ளது. சென்னையின் கோடை வெப்பத்தில் குழந்தைக்கு இன்னும் அதிகமாக வேர்த்து விடுகிறது.

மே மாதம் (2008) 2-ஆம் தேதி காலை அவளைக் கூட்டிக்கொண்டு அர்விந்த் சலூனுக்குப் போனான். முதல் முறையாக அதிதி தலைமுடி வெட்டிக்கொண்டாள். (அவள் அம்மா வெட்டி விட்டதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை). நிறய்ய அழவில்லை.

எதிர்பார்த்தது போலவே அதிதியின் முகம் மாறிவிட்டது, ஆனால் ரொம்ப மாறவில்லை. போட்டோக்களை பாருங்கள்.

Before Haircut


after


Aditi, Haircut

ராஜப்பா
7-15PM 3-5-2008